இயல்பு நிலை திரும்பாத வெள்ளம் சூழ்ந்த பகுதிகள்..!!

Spread the love

மிக்ஜாம் புயல் கடந்து சென்றாலும், அதிகனமழை ஓய்ந்தபோதிலும், அதன் பாதிப்புகள் இன்னும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளை விட்டுச் செல்லவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கூறியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் வெளியே கூட வர முடியாமல் தவிக்கின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதி முழுவதுமாக தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் அதிகளவு தேங்கி இருப்பதால் உணவு, குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இரண்டு நாட்களாகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு சாரை சாரையாக படை எடுத்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள், கார்களை மேம்பாலம் மேல் மக்கள் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

வட சென்னையின் முக்கிய பகுதியான சூளைப் பகுதியில் தண்ணீர் தேங்கி சாக்கடை போல காட்சியளிக்கிறது. அதிகப்படியான இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் சேதமடைந்து இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுல்லாமல் நீர் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் மக்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். எண்ணூர், மணலி போன்ற பகுதிகளிலும் இதே பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் தெர்மாகோலை பயன்படுத்தி மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி வடசென்னையை காக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் சிறு குறு நிறுவனங்கள் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மழை வெள்ளம் மற்றும் அம்பத்தூர் ஏரி நிரம்பி நீர் வெளியேறி நிறுவனங்களை மூழ்கடித்துள்ளது. பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் சேதடைந்துள்ளதாகவும், கழுத்தளவு நீரில் மக்கள் பயணிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.வண்ணாரப்பேட்டையில் இதுவரை தண்ணீர் வடியவில்லை, மின் விநியோகம் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 200 அரசு பேருந்துகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். பழைய வண்ணாரப்பேட்டை, பேஷன் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளிலும் இதே நிலை தொடர்கிறது. உணவு, குடிநீர் மற்றும் பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூடகிடைக்கவில்லை. பால் அதிகளவு விலையில் விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

கொரட்டூர் பகுதியில் பொதுமக்கள் இன்னும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முதியவர் முதல் சிறிய ஒருவரை தவிர்த்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு பணிகள் மேற்கொண்டாலும், துரிதமாக செயல்படவில்லை என்ற குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மடிப்பாக்கத்தில் ராம் நகர், குபேரன் நகர் பகுதிகளில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை எனவும் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து கடும் சிரமத்துக்கு மத்தியிலும் வெளியூர் நோக்கி அப்பகுதி மக்கள் புறப்பட தொடங்கிவிட்டனர். தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் புகார் அளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அதேசமயம் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்ட உணவு அனைவரையும் சென்று சேரவில்லை எனவும் கூறப்படுகிறது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram