மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் 69 இடங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.
புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின்(DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:
- 04.12.2023 அன்று காலை, கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. மேற்படி நிலையத்தின் மூன்று ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாரில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர்.
- N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர்.
- R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமம் தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர்.
- கோயம்பேடு பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டனர்.
- E-1 மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள கணேசபுரம், ஸ்லேட்டர்புரம் & சண்முகா தெருவில் 225 நபர்கள் மீட்கப்பட்டனர்.
- S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு நகரில் 15 நபர்கள் மீட்கப்பட்டனர்.
- 6 நபர்கள் (2 முதியவர்கள், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள்) மேற்கு மாம்பலம் ஶ்ரீனிவாச ஐயர் தெருவில் உள்ள மழைநீர் தேங்கிய அவர்களது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
- S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த ராம் நகரிலிருந்து ஒரு பெண் உட்பட 8 நபர்கள் மீட்கப்பட்டு மயிலை பாலாஜி நகர் நிவாரண மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த அண்ணா நகரிலிருந்து 4 நபர்கள் மீட்கப்பட்டனர்.
- மெரினா கால்வாய் தெருவிலிருந்து 8 நபர்கள் மீட்கப்பட்டு, V.R.பிள்ளை தெருவில் உள்ள (D-6 அண்ணா சதுக்கம் கா.நி) சமுதாய நலக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னை சத்யா நகரிலிருந்து 250 நபர்கள் மீட்கப்பட்டு, செயின்ட் சேவியர் பள்ளிக்கூட நிவராண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- ஈச்சங்காடு சந்திப்பில் கனமழையில் சிக்கிக்கொண்ட மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 22 பயணிகள் மீட்கப்பட்டு, கீழ்க்கட்டளையில் உள்ள பல்லாவரம் நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
- J-8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்தேல் நகரிலிருந்து 60 நபர்கள் மீட்கப்பட்டு, VGP பிலோமினா பள்ளி, அரசு புயல் கட்டிடம் மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்குப்பத்திலிருந்து 50 நபர்கள் மீட்கப்பட்டனர்.
- H-6 ஆர்.கே.நகர் காவல் எல்லைக்குட்பட்ட நேரு நகரிலிருந்து 30 நபர்கள் மீட்கப்பட்டனர்.
- திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குட்பட்ட OVM தெருவில் உள்ள சிதிலமடைந்த வீடுகளிலிருந்து இரண்டு குடும்பத்தினர் மீட்கப்பட்டனர்.
- 67 மரங்கள் அகற்றப்பட்டது நீங்கலாக, வேப்பேரி தானா தெரு மற்றும் பெரவள்ளூர் அகர்வால் கண் மருத்துவமனை அருகில் விழுந்த மரங்கள் (2) மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினரால் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டன.
அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகர காவல்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.