எம்.எஸ்.சி பட்டதாரியான ஸ்ரீலெட்சுமியும் அதே பகுதியை சேர்ந்த ஜிஸ்னு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ஜிஸ்னு பள்ளிப்படிப்பு வரை மட்டுமே முடித்துள்ளார். அதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீலெட்சுமியை தனக்கு திருமணம் செய்து தரும்படி ஜிஸ்னு ராஜூ வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார்.
ஆனால், ஜிஸ்னு மதுப்பழக்கம் கொண்டவர் என்பதாலும் அவர் மீது குற்றப்பிண்ணனி உள்ளதாலும் தன் மகளை திருமணம் செய்துவைக்க ராஜூ மறுத்துவிட்டார். தொடர்ந்து 3 முறை ஜிஸ்னு பெண் கேட்டு ராஜூ வீட்டிற்கு வந்துள்ளார். 3 முறையும் தன் மகள் ஸ்ரீலெட்சுமியை ஜிஸ்னுவுக்கு திருமணம் செய்துவைக்க ராஜூ மறுத்துவிட்டார்.
மேலும், தன் மகள் ஸ்ரீலெட்சுமிக்கு வெறொரு நபருடன் திருமணம் செய்துவைக்க ராஜூ முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று காலை 10.30 மணியளவில் சிவகிரியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், திருமண வரவேறு நிகழ்ச்சிகள் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் பெரும்பாலான விருந்தினர்கள் சென்ற நிலையில் இரவு 11 மணியளவில் ஜிஸ்னு தனது சகோதரன் ஜிஜின் மற்றும் அவரது நண்பர்கள் மேலும் 2 பேருடன் ராஜூ வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு ஸ்ரீலெட்சுமியை தனக்கு திருமணம் செய்துகொடுக்க மறுத்தது குறித்து ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென ஜிஸ்னு அவரது சகோதரன் உள்பட 4 பேரும் சேர்ந்து ராஜூவை சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற ஸ்ரீலெட்சுமி மற்றும் அவரது தாயார் ஜெயா, திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள் மீதும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த மண்வெட்டியால் ராஜூவை ஜிஸ்னு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜூவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராஜூவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 4 பேரும் தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் தலைமறைவான ஜிஸ்னு உள்ளிட்ட 4 பேரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் உள்ளூர் மக்களே ஜிஸ்னு மற்றும் அவரது கூட்டாளிகள் என 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
NEWS EDITOR : RP