இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்திற்கு பின் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு, தான் சாதாரண நிலைக்கு மீண்டு வரும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி டெல்லியில் இருந்து காரில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு தனது தாயை பார்க்க வந்துகொண்டிருந்தார். அதிகாலையில் அவர் வந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. சிறு பள்ளத்தை தவிர்க்க காரை திருப்பியபோதுதான், கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த அவர், ஹரியானா அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் டெஹ்ராடூன் மருத்துவமனையில் ரிஷப் பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, விமானம் மூலமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 3க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நாள் மருத்துவமனையில் இருந்த ரிஷப் பந்த் கடந்த ஜனவரி மாதம் ட்வீட் செய்திருந்தார். அதில், தனது காயங்களிலிருந்து மீண்டு வருவதாக அவர் கூறியிருந்தார்.
தற்போது வீட்டில் இருக்கும் ரிஷப்பிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறது. விபத்தின் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அண்மையில் சற்று சிரமப்பட்டு படிக்கட்டுகள் ஏறிவரும் படியும், பின்னர் தற்போது சாதாரணமாக யார் உதவியும் இன்றி படியில் ஏறிவரும் படியும் அந்த வீடியோ அமைந்துள்ளது.
அந்த பதிவில், “சில நேரங்களில் எளிமையான விஷயம்கூட கடினமாக இருக்கும். அவ்வளவு ஒன்னும் மோசமில்லை“ என ரிஷப் தனக்குத்தானே தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். அந்த பதிவிற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும், கமெண்ட் செய்து ரிஷபை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
NEWS EDITOR : RP