சென்னை விருகம்பாக்கம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாராஜா (வயது 31), இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகாராஜா விருகம்பாக்கம், ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவர் வீட்டில் சாவிவை வீட்டில் தவறி வைத்து விட்டதாகவும் கதவை திறப்பதற்கு சிரமமாக இருப்பதால் மொட்டை மாடியில் இருந்து பால்கனி வழியாக வந்து வீட்டின் உள்பக்கமாக சென்று கதவை திறந்து தருமாறு மகாராஜாவிடம் உதவி கேட்டார். அவர் வீட்டின் 4-வது மாடியில் மொட்டை மாடி வழியாக நுழையும்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேபாளத்தை சேர்ந்த தேவ் என்பவரின் மகன்கள் ராம், லட்சுமணன் (வயது 18). இரட்டை சகோதரர்கள். இருவரும் பெரம்பூர், திம்மசாமி தர்கா தெருவில் தங்கி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தனர். நேற்று கடையில் வேலை முடிந்த பிறகு முதலில் ராம் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் கழித்து மற்றொரு சகோதரர் லட்சுமணன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வாசலில் ராம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராமை மீட்டு லட்சுமணன் பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராம் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP