அமமுக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே டி.டி.வி.தினகரனுடன் இணைந்து பயணித்து வருபவர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. அமமுகவில் தற்போது கொள்கைப் பரப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கட்டளையிட்டுள்ளதால், வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
மேலும், ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்றும் விசாரித்தார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வணக்கம் சொன்னதைக் கவனித்து காரில் இருந்து இறங்கிச் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சரின் செயலால் மிகவும் மகிழ்ந்த சி.ஆர்.சரஸ்வதி, அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததோ பேசியதோ இல்லை. நான் இப்பகுதியில் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கிறேன். இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார் பங்கேற்ற தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு இப்போது தான் வந்தேன். முதல்-அமைச்சர் வருவதாகச் சொன்னார்கள். சி.எம். எங்கள் வீட்டை தாண்டி போவதால் வணக்கம் சொல்லலாம் என நின்று கொண்டிருந்தேன்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது பற்றி எடுத்துக்கூறினேன். அதற்காகத்தான் ஆய்வு செய்ய வந்தேன். விரைவில் பணிகளை முடித்து விடுவோம் எனக் கூறினார். மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லோருக்கும் அவர் தானே முதல்-அமைச்சர். நான் வணக்கம் சொல்லிவிட்டு இங்கேயே நின்றேன். முதல்-அமைச்சர் திரும்பி காரில் இருந்து இறங்கி வந்து “எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா?” என விசாரித்தார். என்ன பிரச்சினைகள் இருக்கிறது எனக் கேட்டார். முதல்-அமைச்சரிடம் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தேன்.
NEWS EDITOR : RP