தேன்கனிக்கோட்டை பகுதியில் விலை சரிவால், விற்பனையாகாத பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் திறந்த வெளி மற்றும் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பூக்களை ஓசூர் மலர் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கும் வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ஆயுத பூஜை விற்பனையை மையமாகக் கொண்டு சாமந்தி, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா உள்ளிட்ட மலர்களை ஒரேநேரத்தில் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
மேலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கடந்த சில வாரங்களாக பூக்கள் மகசூல் அதிகரித்துள்ளது. சந்தைக்கு தேவைக்கு அதிகமாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பல விவசாயிகள் பூக்கள் அறுவடையைத் தவிர்த்து வருகின்றனர். விற்பனையாகாத பூக்களைச் சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: தற்போது, திருமணம் மற்றும் பண்டிகை சீசன் இல்லாததாலும், சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும், பூக்கள் விலை சரிந்துள்ளது. கடந்த வாரங்களில் கிலோ ரூ.150 முதல் 250 வரை விற்பனையான சாமந்தி, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா உள்ளிட்ட மலர்கள் நேற்று ரூ.10-க்கு விற்பனையானது. மேலும், வரத்து அதிகரிப்பால் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால், விற்பனையாகாத பூக்களை பல விவசாயிகள் சாலையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.
NEWS EDITOR : RP