சென்னை திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் அன்பு. மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் 3 பேருடன் சேர்ந்து பைபர் படகு மூலம் திருவொற்றியூர் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார்.
அப்போது அவர்கள் வலை வீசி நண்டு பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் ஏதோ ஒரு மர்மபொருள் சிக்கியது. இதையடுத்து மீனவர்கள், அந்த பொருளை எடுத்து பார்த்ததில், சிக்கியது டிரோன் என தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பியதும், வலையில் சிக்கிய டிரோனை காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் டிரோனை சோதனை செய்த போது, அது 2 அடி நீளம், 1 அடி உயரமாக இருந்தது. 6 இறக்கைகளும் காணப்பட்டன. மேலும் அதில் சாகர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது கடலோர காவல் படைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிரோன் குறித்து போலீசார் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், அந்த டிரோனை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிக்கு பறக்க விட்டபோது தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
NEWS EDITOR : RP