சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்து விழா பேரூரையாற்றினார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;
அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியாக இருந்தது. மக்களின் அன்பால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அன்பை பெற்று நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி பெற்றதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் கொடுத்த வாய்ப்பால்தான் எம்எல்ஏ, அமைச்சர் மற்றும் முதலமைச்சராக பதவி பெற்றேன் என்றும் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி கொடுத்தார்கள். அவருக்கு பின்னர் நாம் சிறப்பாக செயல்பட்டு வந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு அவர்கள் அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை கை கழுவி வருகின்றனர். பலதிட்டங்களை அப்படியே நிராகரித்துவிட்டனர். குறிப்பாக அதிமுக ஆட்சியில் 52 லட்சம் பேர்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டுள்ளது.உலகத்தில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள் என்று கூறும் அளவிற்கு இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டது.
அந்த திட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து செய்யப்படும், முதல் கையெழுத்திடப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். அதற்கு இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த 100 மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் பெருமிதம் தெரிவித்தார். அதிமுக அரசு தான் மக்களுக்கு சேவை செய்கின்ற அரசாங்கம். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோமோ அதை படிப்படியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.
நூறு ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை நீரேற்று திட்டத்தின் மூலமாக ஏரியில் நிரப்பும் திட்டம் விவசாயிகளுக்கு மகத்தான திட்டம் .இதில் கூட பாகுபாடு பார்க்கிறார்கள். மற்றும் மின்சார கட்டணம் 52 சதவீதம் அதிகரித்துவிட்டது, வீட்டுவரியும் உயர்த்தப்பட்டு விட்டது.
கிராமப்புற மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு கூட வரி விதிக்கும் அரசாங்கம் திமுக அரசாங்கம் தான் எனவும் விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று திமுக அமைச்சரவையில் இருந்த அமைச்சர் பேசினார். இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி கொள்ளையடித்தால், எப்படி நிதி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினர்.
திமுக அரசு 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசுவார்கள், தேர்தல் முடிந்தால் மக்களை மறந்து விடுவார்கள். ஆனால் சேலம் எடப்பாடி தொகுதி மக்கள் உஷாராக இருந்து என்னை தேர்ந்தெடுத்த்தால் தான், நான் தற்பொழுது கேள்வி கேட்டு வருகிறேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்று திருடிக் கொண்டிருந்தார்கள், தற்போது காரில் சென்று திருடும் நிலை உருவாகிவிட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என அனைத்தும் அதிகரித்துவிட்டது. போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்றார். மக்கள் சந்தோஷமாக வாழ்ந்த காலம் அதிமுக ஆட்சி காலம் தான் என்றும் அவர் கூறினார்.
NEWS EDITOR : RP