இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் தன் பணத்தைப் பொய் கணக்குக் கூறி திருடிவிட்டார் எனக் கடும் குற்றச்சாட்டை வைத்தார். இதைத் தொடர்ந்து, அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, கரு.பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் அறிக்கை வெளியிட்டனர்.
அதன் பின், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமீர் தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அப்படத்தின் இயக்குநர் அமீர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டு விழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல்
திரைப்படம் “மௌனம் பேசியதே” வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையை நோக்கி சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை.
அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு.கணேஷ் ரகு மற்றும் திரு.வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த திரு.சூர்யா, செல்வி.திரிஷா, திருமதி.லைலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் திரு.ராம்ஜி மற்றும் திரு.யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.