1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது தாத்தா இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற கிராமத்தை சேர்ந்தவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்னம் மருத்துவப் பேராசிரியர். தர்மன் சண்முகரத்னம் ஜப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்.சிங்கப்பூரில் ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி பயின்ற தர்மன், லண்டன் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் பயின்றார். ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றியவர்.30 நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார். ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் மூத்த மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2003 முதல் 2008 வரை அமைச்சரவையில் இடம் பெற்ற அவர் நிதி, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளை கவனித்து வந்தார்.
NEWS EDITOR : RP