மும்பை, அகமத்நகரில் சமீபத்தில் மத ஊர்வலத்தின் போது சிலர் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படத்தை எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல அவுரங்கசீப்பின் படத்தை வாட்ஸ்அப் முகப்பு படமாக வைத்தவர் நவிமும்பையில் கைது செய்யப்பட்டார். வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அவுரங்கசீப்பின் கல்லறையில் மரியாதை செலுத்தியதற்கும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில் அகோலாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது
அகோலா, சம்பாஜிநகர், கோலாப்பூரில் நடந்தது தற்செயலாக நடந்தவை அல்ல. அது ஒரு சோதனை முயற்சி. எப்படி அவுரங்கசீப் அனுதாபிகள் மாநிலத்தில் இவ்வளவு பேர் வந்தனர்?. அவுரங்கசீப் எப்படி நமது தலைவராக இருக்க முடியும்?. நமது ஒரே அரசன் சத்ரபதி சிவாஜி தான்.
இந்திய முஸ்லீம்கள் அவுரங்சீப்பின் வம்சாவளியினர் கிடையாது. அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் யார் என கூறுங்கள்?. அவுரங்கசீப்பும் அவரது முன்னோர்களும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். தேசியவாத முஸ்லீம்கள் அவரை அங்கீகரிக்கமாட்டார்கள். அவர்கள் சத்ரபதி சிவாஜியை தான் தங்களது தலைவராக அங்கீகரிப்பார்கள். அவுரங்கசீப் நாட்டை பல ஆண்டுகளாக ஆண்டவர் என பிரகாஷ் அம்பேத்கர் கூறுகிறார். ஹிட்லர் கூட தான் ஜெர்மனியை ஆட்சி செய்தார். பலர் ஹிட்லரை கடவுளாக வணங்கினர். உங்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை. உத்தவ் தாக்கரே, பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி வைத்து உள்ளார். அவர், பிரகாஷ் அம்்பேத்கரின் செயலை ஏற்று கொள்வாரா?. இவ்வாறு அவர் பேசினார்.
NEWS EDITOR : RP