திருப்பூர் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் பணியில் மாவட்ட சுகாரதாரத்துறை அதிரடியாக இறங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சின்னக்கரை லட்சுமி நகரில் செயல்பட்டு வரும் திவ்யா கிளினிக்-ல் சோதனை செய்தனர். இந்த கிளினிக்கை திவ்யா, சுசியா என இரு சகோதரிகள் நடத்தி வருகின்றனர். திவ்யா இளநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்துள்ளார். சுசியா பல் மருத்துவம் படித்துள்ளார். திவ்யா தற்போது சென்னையில் தங்கி வரும் சூழ்நிலையில் சுசியா மட்டுமே கிளினிக்கில் உள்ளார். இந்நிலையில் அதிகாரிகளின் சோதனையின் போது
சுசியா ஒன்பது மாத கர்ப்பிணி ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது கையும்,களவுமாக பிடிப்பட்டார். இதனையடுத்து இருவரையும் விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மருத்துவத்துறை இணை இயக்குநர் அலுவலரின் முன்பாக ஆஜராகையில் சுசியா கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்த்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து இருவரையும் கடுமையாக எச்சரித்த அதிகாரிகள் இருவரிடமிருந்தும்
மன்னிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சுசியா மருத்துவம் பார்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் மருத்துவம் படித்துள்ளதால் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலை தொடர்ந்து இருவரையும் எச்சரித்து அனுப்பி உள்ளோம். மருத்துவம் படிக்காமல் இச்செயலில் ஈடுபட்டுருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்; எனினும் இதுவே கடைசி முறை எனக்கூறி எச்சரித்து அனுப்பி உள்ளோம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP