45 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு !

Spread the love

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது.

இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாஹ் வீட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அவரையும் கொலை செய்தது. மேலும் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் அடுத்த தலைவரான யஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார். காசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த போரில் 1000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இதேபோல இந்த ஒரு வருடம் மட்டுமே பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இதுவரை நடைபெற்ற உலகப் போர்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம் என்று பல சர்வதேச பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டனர். பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists) வெளியிட்ட அறிக்கையின்படி 180க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அதிகமானோர் பாலஸ்தீனியர்கள் என்பது தெரியவந்தது.

போர் தொடங்கியதில் இருந்து காசாவில் இதுவரை 45, 028 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,06,962 காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. இடிபாடுகள் அல்லது மருத்துவர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் புதைந்திருப்பதால் உண்மையான பலி இன்றும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு முன்பு காசாவில் 23 லட்சம் பேர் இருந்த நிலையில், இந்த போரில் 2 சதவீதம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காசாவில் இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram