கிருஷ்ணகிரி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள். முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பேயனூரை சேர்ந்தவர் அருணகிரி (வயது 37). முன்னாள் ராணுவ வீரர். இவர் மோட்டார்சைக்கிளில் பாறையூர் பக்கமாக நேற்று முன்தினம் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் அருணகிரி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயரிங் மாணவர் கிருஷ்ணகிரி செட்டியம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுகந்தர். இவரது மகன் அன்பரசன் (19). இவர் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 3-ந் தேதி இவர் மோட்டார்சைக்கிளில் குருபரப்பள்ளி அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அன்பரசன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மெக்கானிக் கிருஷ்ணகிரி தம்மண்ண நகரை சேர்ந்தவர் ரவி (40). மெக்கானிக். இவர் கடந்த 3-ந் தேதி மத்திகிரி அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் ஒரு பணிமனையில் வாகனத்தை பழுது பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, சரக்கு வாகனம் ஒன்றை ஆன் செய்து பழுதை சரிபார்த்து கொண்டிருந்த போது திடீரென்று வாகனம் பின்நோக்கி சென்று ரவியின் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழிலாளி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் லக்கிந்தர் சகானி (46). கூலித்தொழிலாளி. இவர் பாகலூர் அருகே பெலத்தூரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 1-ந் தேதி இவர் பாகலூரில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லக்கிந்தர் சகானியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாப மாக இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
NEWS EDITOR : RP