புதுச்சேரியில் மிகப்பெரிய டானாக வலம் வரும் அன்பரசு (ஃபெப்சி விஜயன்) தனது மகன் பென்னி (ரெடின் கிங்ஸ்ஸீ)க்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதன்படி பணம் கொடுத்து விருப்பமில்லாத பெண் ஒருவரை தேர்வு செய்கிறார். கடைசி நேரத்தில் அந்த பெண் ஓடிவிட, அவரது தங்கை சோஃபியாவை (சுரபி) மணம் முடிக்க ஆயத்தமாகின்றனர். இதையறிந்த சோஃபியாபவின் காதலர் சதீஷ் (சந்தானம்), அன்பரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து கல்யாணத்தை நிறுத்தி சோபியாவை மீட்க நினைக்கிறார். இதற்காக அவர் திரட்டிய பணம் பேய் பங்களா ஒன்றில் மாட்டிக்கொள்கிறது. இறுதியில் அந்த பணத்தை அவர் மீட்டாரா? இல்லையா? அந்த பங்களாவில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.
‘குளு குளு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார் சந்தானம். அவரின் முந்தைய பாடி ஷேமிங், அடல்ட் வகையறா நகைச்சுவைகளை தவிர்த்துவிட்டு காட்சிகளுக்கு ஏற்றார் போன்ற டைமிங் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ப்ரேம் ஆனந்த். எதிர்பாராத தருணங்களில் ஆச்சரியப்படுத்தும் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் அவரது எழுத்து கதையோட்டத்துக்கு பெரும் பலம். நிறைய கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்த போதிலும் அவற்றை வீண்டிக்காமலும், திணிக்காமலும் கொண்டு சென்றது நேர்த்தி. சின்ன சின்ன கொள்ளை கும்பல் அவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள், கைமாறிக்கொண்டேயிருக்கும் பணம், சேஸிங், அதற்கு தகுந்தாற்போல நுழைக்கப்பட்ட காமெடிகள் என இடைவேளைக்கு முன்பு வரை கதைக்கருவான ஹாரருக்குள் நுழையாத திரைக்கதை பார்வையாளர்களுக்கு அயற்சி கொடுக்காமல் நகர்கிறது.
படம் மையக்கதைக்குள் நுழையும்போது ஒரு கேம், அதற்கான வெவ்வேறு லெவல்கள் என்ற கான்செப்ட் நமக்கு பழக்கப்பட்டிருந்தாலும், அதையொட்டி எழுதப்பட்டுள்ள சில சுவாரஸ்யமான காட்சிகள் அத்துடன் கைகொடுக்கும் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. இன்ட்ரோ பாடல்களை தவிர்த்து மற்ற தேவையற்ற பாடல்களையோ, காதல் காட்சிகளையோ இடையில் சேர்த்து துன்புறுத்தாமல் இருந்தது பெரும் ஆறுதல். ‘தல’ன்னு சொல்லாதடா ‘ஏகே’ன்னு சொல்லு, ‘ப்ளடி ஸ்வீட்’, ‘ரோலக்ஸ்’ இப்படியான சமகால சூழலுடன் தொடர்புடைய வசனங்கள் காமெடியில்லாத இடங்களை நிரம்பி ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கின்றன.
முரட்டு வில்லனாக வரும் சாய் தீனா கூட இறுதியில் சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். பேயாக பிரதீப் ராம் சிங் ராவத் சில காட்சிகளே வந்தாலும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். நடிகை சுரபிக்கு பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் நடிப்பிலும் குறையில்லை.ஒரு சில பரிட்சார்த்த முயற்சிகளுக்குப் பின் மீண்டு தனது கம்போர்ட் ஜானரான காமெடிக்கு திரும்பியிருக்கிறார் சந்தானம். டைமிங், ரைமிங் கலந்த கலாய், பேயிடம் நக்கலாக நடத்தும் பேச்சுவார்த்தை, அசால்ட்டான உடல்மொழி என மிகையில்லாத நடிப்பால் கவர்கிறார். ஆனால் சண்டைக்காட்சிகளில் மட்டும் தடுமாற்றம் இருப்பதை உணரமுடிகிறது. அவரை தவிர்த்து, மாறன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பழைய ஜோக் தங்கதுரை, குறிப்பாக ஃபெஃப்சி விஜயன், பிபின், தீபா ஆகியோர் நகைச்சுவையில் கவனம் பெறுவதுடன் கதாபாத்திரங்களுடன் பொருந்திபோகிறார்கள்.
NEWS EDITOR : RP