அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.200 ஆக விலை அதிகரித்தது. நேற்று விலை சற்று இறக்கம் கண்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை மூலம் அரசே தக்காளி விற்பனையை மேற்கொண்டது. தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை காய்கறி அங்காடிகள் மற்றும் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
தூத்துக்குடியிலும் பண்ணை பசுமை காய்கறி அங்காடி மற்றும் 15 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தற்போது ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ரேஷன் கடைகளுக்கு தக்காளி விநியோகம் செய்யப்படவில்லை.பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் தக்காளி விலை ரூ.95 ஆக உயர்ந்தது.இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் (ஆக.1) 500 கடைகளாக விரிவு படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். ரேஷன் கடைகள் மற்றும் பண்ணை பசுமை அங்காடியில் தொடர்ந்து குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பண்ணை பசுமை காய்கறி அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் கிலோ ரூ.60 என்ற விலையில் தொடர்ந்து தக்காளி விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், தூத்துக்குடியில் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வந்த ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP