திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியை சுற்றி சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி பே கோபுரத் தெரு சந்திப்பு திரவுபதி அம்மன் கோவில் முதல் காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் தொடங்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் மொத்த அளவு 1080 மீட்டர் ஆகும். அதில் தற்போது 350 மீட்டர் அளவிற்கு பே கோபுரத் தெருவில் முதற்கட்டமாக பணிகள் தொடங்கப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வரும் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து இதில் அடுத்த கட்டமாக 150 மீட்டருக்கு சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) அடுத்த கட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்ய கிரிவலப்பாதை செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள மைதானம் மற்றும் சிம்ம தீர்த்த குளத்தின் எதிரில் உள்ள இடத்தில் பார்க்கிங் செய்ய அறிவுறுத்த போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் மாட வீதியில் கூடுதல் போலீசார் நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
NEWS EDITOR : RP