அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததுடன் ஆளும் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அஜித் பவார் ஏற்கெனவே 2019ல் பாஜகவுடன் இணைந்து பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் தற்போது அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக அணியுடன் சேர்ந்திருப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு போஸ்டரை வெளியிட்டு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் பாஜக வாஷிங் மெஷின் என்றும் மோடி வாஷிங் பவுடர் என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். அதோடு “அரசியல் தலைவர்களின் கறைகளைக் கழுவ, மத்திய புலனாய்வு அமைப்புகளை ‘வாஷிங் பவுடராக’ பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக” என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விமர்சனம் செய்தவர்கள் ஏமாற்றமடைவார்கள். பாட்னாவைத் தொடர்ந்து அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூலை 17, 18ல் பெங்களூருவில் நடைபெறும். மும்பை அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் உறுதியை வலுப்படுத்தும்’ என்றும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், மோடி வாஷிங் பவுடர் அனைத்து கறைகளையும் தூள் தூளாக்கும், அனைத்து ஊழல்வாதிகளையும் அமைச்சர்களாக்குவது உறுதி’ என்று பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு, உலகின் தலைச்சிறந்த வாஷிங் மிஷின் பாஜக என பதவிட்டுள்ளார்.
இதுபோல நெட்டிசன்கள் பலரும் இந்த போஸ்டரை பகிர்ந்து விமரிசித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
NEWS EDITOR : RP