முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களால் பயன்பாடு அதிகரித்து தேங்காய் விலை உயர்ந்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் மற்றும் தேங்காய் வர்த்தகத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் எனப் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.
நிகழாண்டில் தென்னை மரங்களில் வழக்கத்தை விட மகசூல் அதிகரித்தால், தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால், கடந்த மாதங்களில் தேங்காயை இருப்பு வைக்காமல், கிடைக்கும் விலைக்கு வெளி மாநிலங்களுக்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அடுத்தடுத்து வரும் முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களால் தேங்காய் விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருவதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அரசம் பட்டியைச் சேர்ந்த தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் கென்னடி கூறியதாவது; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் 35 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகள் சுமார் 1.50 கோடி தேங்காயை அறுவடை செய்கின்றனர்.
கடந்த மே மாதம் தேங்காய் சராசரியாக ஒரு டன் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் விலை போனது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தேங்காய் ஒரு டன் ரூ.27 ஆயிரம் வரை விலை போகிறது. சராசரியாக ஒரு தேங்காய் விலை எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்ந்துள்ளது.
தென்னை மரங்களில் பங்குனி மாதம் முதல் ஆடி மாதம் வரை நல்ல மகசூல் இருக்கும். புரட்டாசி முதல் தை வரை 30 சதவீதம் மகசூல் பாதிக்கப்படும். தற்போது, 100 காய்கள் காய்ப்புள்ள மரத்தில் 60 காய்கள் மட்டுமே கிடைக்கின்றன. மேலும், வரும் விஜய தசமி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில் தேங்காயின் பயன்பாடு அதிகரிக்கும். எனவே, சந்தை தேவை அதிகரிப்பு காரணமாக ஒரு டன் தேங்காய்க்கு ரூ.30 ஆயிரம் வரை விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NEWS EDITOR : RP