காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து காஞ்சீபுரத்திற்கு தனியார் பஸ்சில் நேற்று வந்தார். பஸ்சில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல் ஒலித்தது. சத்தத்தை குறைக்கும்படி கண்டக்டரிடம் கூறினார். இதை ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து சினிமா பாடல் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பபட்டது. மீண்டும் ஒலியை குறைக்க கூறிய நிலையிலும் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் அதனை அலட்சியப்படுத்தியதை தொடர்ந்து காஞ்சீபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு இது குறித்து நீதிபதி செம்மல் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் அருகே பஸ்சை நிறுத்தி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து டிரைவருக்கு போக்குவரத்து எச்சரிக்கை விடப்பட்டு பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு அறிவுரை கூறி இது போன்று பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP