சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்த போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 38) என்ற பயணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை கண்ட விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனர்.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, பயணியின் உடல் நலம் குறித்து கூறி மருத்துவ குழுவை தயாராக இருக்கும்படி தெரிவித்தார். அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியவுடன் அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி பயணியை பரிசோதனை செய்தனர். அப்போது கடுமையாக நெஞ்சுவலி ஏற்பட்டு பயணி தனசேகரன், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 7 வருடத்துக்கு முன்பு மஸ்கட்டில் டிரைவர் வேலைக்காக சென்ற தனசேகரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிக்கு வந்து உடல் நிலையை கவனித்து கொள்ள மஸ்கட்டில் இருந்து வந்ததும், ஆனால் நடுவானில் விமானத்திலேயே உயிரிழந்து விட்டதும் தெரிந்தது. இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
NEWS EDITOR : RP