கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை கொள்ளிடம்; கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. புதுமண்ணியாறு கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது புது மண்ணியாறு பாசன வாய்க்கால் ஆகும். இதன் மூலம் கொள்ளிடம் பகுதியில் நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று சுமார் 10,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த புது மண்ணியாறு பாசன வாய்க்கால் தஞ்சை மாவட்டத்தில் மணஞ்சேரி என்ற இடத்தில் காவிரியிலிருந்து மண்ணியாறு என்ற பெயரில் பிரிந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக புகுந்து புது மண்ணியாறு என்ற பெயரில் உருமாற்றம் பெற்று கொள்ளிடம் பகுதியில் பாசன வசதி அளித்துவிட்டு இறுதியில் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே தற்காஸ் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்க கடலில் சங்கமிக்கிறது.
கட்டுமான பணி நிறுத்தம் தற்பொழுது புதுமண்ணியாற்றின் குறுக்கே மாதானம் கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடைமடை விவசாயிகள் புதுமண்ணியாற்றில் தடுப்பணை இப்பகுதியில் கட்டக் கூடாது என்று கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பணி நடைபெறாமல் இருந்து வருகிறது.
கான்கிரீட் தளம் இது குறித்து தாண்டவன் குளம் ஊராட்சி தலைவர் வாசுதேவன் கூறியதாவது:- கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் புதுமண்ணி ஆறு விளைநிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. மேலும் மழைக்காலத்தில் வடிகாலாக செயல்பட்டு வருகிறது. இந்த வாய்க்காலில் கடந்த வருடம் மாதானம் கிராமத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்காலின் உள்பகுதியில் பாதுகாப்புக் கருதி 2 கரை பகுதியை ஒட்டியும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வாய்க்கால் நடுப் பகுதியிலும் கான்கிரீட் தளம் அமைத்து தண்ணீர் எளிதில் வேகமாகச் சென்று வடியும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பணை வேண்டாம் புதுமண்ணி ஆற்றின் மூலம் தாண்டவன் குளம், பழையபாளையம், வேட்டங்குடி, புதுப்பட்டிணம், அகர வட்டாரம், தற்காசுஸ், வில்லியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தடுப்பணை கட்டுவதால் விளைநிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காது என்ற அச்சத்தில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தியுள்ளனர். மேலும் இப்பகுதி கடைமடை பகுதி என்பதால் இப்பகுதியில் தடுப்பணை கட்ட அரசு அனுமதிக்க கூடாது.இது குறித்து கலெக்டர் மகாபாரதி மற்றும் பொதுப்பணித்துறை காவிரி கோட்ட உதவிசெயற்பொறியாளர் சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். எனவே புது மண்ணியாற்றின் குறுக்கே பழையபாளையம் மாதானம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
NEWS EDITOR : RP