சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்று, உலகையே தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா… இந்திய மண்ணின் செஸ் வரலாறுகளை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் எண்ணற்ற ஆளுமைகள் இருந்தாலும், தனித்து நிற்கும் இந்த பிரக்ஞானந்தா தனக்கென்று ஒரு பாணியை பின்பற்றி தரமான சம்பவங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார்.
இந்தியாவில் 80-க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவெடுத்திருந்தாலும், தன்னைத் தானே செதுக்கிக்கொண்டே போகும் பிரக்ஞானந்தா இந்தியாவின் எண்ணற்ற கனவுகளை தனது 18 வயதிலேயே சுமந்து செல்கிறார். பிரக்ஞானந்தா திடீரென உருவெடுத்தாரா என கேட்பவர்களுக்கு, அவரது ஆரம்பகால செஸ் பயணம் முதல், உலகக் கோப்பை பயணம் வரையிலான பயணம் வியப்பை ஏற்படுத்தும்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தலைநகர் சென்னையில் பிறந்தவர் பிரக்ஞானந்தா. போகோ சேனல் பார்த்துக்கொண்டிருந்த சமயத்திலேயே அவரது அக்காவை போல சதுரங்கத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன்படியே செய்த அவர் இந்த விஸ்வரூப வளர்ச்சியை நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.
குறைந்த வயதிலேயே செஸ் மீதான ஆர்வம் தொற்றிகொள்ள 5 வயதிலேயே களம் கான தயாரானார் பிரக். 2013-இல் தனது 8-ஆவது வயதிலும், 2015-இல் தனது 10-ஆம் வயதிலும், ஃபிடே மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் அந்தஸ்து, தனது 12-ஆவது வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்துகளை பெற்றது மூலம், சதுரங்க வரலாற்றிலேயே இளம் வயதில் இத்தனை சாதனைகளை படைத்த வீரர் என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆனார் பிரக்ஞானாந்தா.
தனது குருவாக கருதும் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் அறிவுரைகளை பின்பற்றி, எண்ணற்ற போட்டிகளை எதிர்கொண்டு விளையாடி வரும் பிரக்ஞானந்தா, 2019-இல் உலக இளையோர் சாம்பியன் பட்டம், 2600 ஃபிடே புள்ளிகள் பெற்று இந்தியாவின் இளம் நட்சத்திரமாக திகழ்ந்தார்.
இந்தியாவில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற்று முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய ஆடவர் B அணியில் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, அணியில் தனது பங்களிப்பை வலுப்படுத்தியது மூலம் இந்திய அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. அதுமட்டுமின்றி, விளையாட்டுத் துறை விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது வழங்கி பிரக்ஞானந்தாவை சிறப்பித்தது மத்திய அரசு.
ஆசிய சாம்பியன்ஸ் சதுரங்க தொடர் சாம்பியன் பட்டத்தை டெல்லியில் கடந்த ஆண்டு கைப்பற்றிய பிரக்ஞானந்தா, தனது ரேட்டிங் அடிப்படையிலும், சமீப கால போட்டிகளின் வெற்றி விகிதத்தின் அடிப்படையிலும் நடப்பாண்டு சதுரங்க உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றார்.உலகக் கோப்பை தொடரில், இரண்டாம் சுற்றில் பிரான்ஸ் வீரர் லகார்டே மாக்ஸிம்,
மூன்றாம் சுற்றில் செக் குடியரசின் டேவிட் நவரா, 4 ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, 5 ஆவது சுற்றில் ஹங்கேரியை சேர்ந்த ஃபெரென்க் பெர்க்ஸ் என ஒவ்வொருவரையும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
NEWS EDITOR : RP