விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனது உதவியாளரை காலணியை எடுத்துவரச் செய்தததாக செய்திகள் வெளியான நிலையில் அதுதொடர்பாக கோட்டாட்சியர் பிரவீணா குமாரி விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக ஆய்வு சென்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி தன் உதவியாளரிடம் தன் காலணியை கொண்டுவருமாறு உத்தரவிட்டதாகவும், இதையடுத்து அவரின் உதவியாளர் கோட்டாட்சியரின் காலணியை கொண்டுவந்து ஜீப் பின்புறம் வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக பிரவீணாகுமார், “ஆய்வுக்காக நான் எம்எல்ஏ புகழேந்திக்காக ஸ்டாலின் நகரில் காத்திருந்தபோது, காலணியை கழட்டிவிட்டுவிட்டு அமர்ந்திருந்தேன். எம்எல்ஏ வந்தவுடன் அவரை வரவேற்க காலணியை அணியக்கூட தோன்றாமல் சென்றுவிட்டேன். இதனை அறிந்த உதவியாளர் தன்னிச்சையாக அவரே காலணியை கொண்டுவந்து, நாங்கள் ஆய்வுக்கு செல்லும் திசையில் வைத்தார். அப்போதே நான் என் உதவியாளரை அழைத்து கடுமையாக கண்டித்தேன் இதனை அங்கிருந்தவர்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டனர்” என்று கூறியுள்ளார்.
இதனை செய்தியாக நேற்று இந்து தமிழ் திசை வெளியிட்ட நிலையில் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி விளக்கமளித்துள்ளார்.
NEWS EDITOR : RP