யானைகளுக்கும், பாகனங்களுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் வகையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ”தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வல்ஸ் இயக்கினார்.
இந்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி பிரபலமாகிய நிலையில் இப்படம் சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றது. இந்நிலையில் ஆஸ்கர் தம்பதிகளான யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியரை ஆவணப்பட இயக்குநர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மட்டுமல்லாமல், இயக்குநர் மீது பொம்மன், பெள்ளி தம்பதியினர் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஆவணப் படத்தில் நடித்த பெள்ளி, கார்த்திகி கோன்சால்வல்ஸ் ஆவணப்படம் இயக்கும் போது தங்களுக்கும், தங்கள் பேத்தியின் திருமண செலவிற்கும் உதவி செய்வதாக தெரிவித்ததாகவும், ஆனால் ஆஸ்கர் விருது பெற்ற பின் தங்களை கண்டு கொள்ளவில்லை எனவும், செல்போனில் தொடர்பு கொண்டாலும் தங்களது அழைப்பை துண்டித்ததாகவும் தெரிவித்தார்.
அதே போல் வீடு, கார் மற்றும் பண உதவி செய்ததாக கூறியதும் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதாக இயக்குநர் கூறி வந்தது முற்றிலும் பொய் எனவும், இரண்டு வருடமாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பிற்கு இயக்குநர் தங்களிடம் பணம் கேட்டதாகவும், படம் வெளியானதும், பணத்தை திரும்ப தருவதாகவும் கூறியதால். தங்களது பேத்தியின் திருமணத்திற்காக வங்கி கணக்கில் வைத்திருந்த பணத்தை இயக்குநரிடம் வழங்கியதாகவும் பெள்ளி தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது வரை அந்த பணத்தை இயக்குநர் தங்களிடம் திருப்பித் தரவில்லை எனவும் பணத்தைக் கேட்டு செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் தான் பிசியாக உள்ளேன் என இணைப்பை துண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
இரண்டு வருட படப்பிடிப்பிற்கு தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த கார்த்திகிக்கு அறைகளை சுத்தம் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல உதவிகளை செய்து கொடுத்ததாகவும், பெற்ற மகளைப் போல் இயக்குநர் கார்த்திகியிடம் பழகியதாகவும், ஆனால் ஆஸ்கர் விருது பெற்ற பின் அவர் தங்களுக்கு வீடு, கார் வாங்கி கொடுத்ததாகவும் மற்றும் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதாகவும் பொய்யான தகவல்களை கூறி வருவது மிகுந்த வேதனையை அளிப்பதாக பெள்ளி தெரிவித்தார்.
NEWS EDITOR : RP