மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அந்த அச்சுறுத்தல் பொய்யானது என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை மேலும் இரு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பையிலிருந்து மஸ்கட் செல்லும் 6இ 1275 மற்றும் மும்பையிலிருந்து சவுதியின் ஜெட்டா செல்லும் 6இ 56 ஆகிய இரு இண்டிகோ நிறுவன விமானங்களுக்கு இன்று காலை தனித்தனியே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இரு விமானங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, இண்டிகோ நிறுவனம் ’விமான பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டது. பயணிகளுக்கு நேர்ந்த அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்’ என தெரிவித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா விமான நிலையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள் எங்கிருந்து தகவல்கள் கிடைத்தன என்பது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.