மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரண்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாலத்தீவு இந்தியா இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லி நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள பாதுரா என்ற உணவகம் ஒரு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஒவ்வொரு லட்சத்தீவு முன்பதிவு அல்லது ரத்து செய்யப்பட்ட மாலத்தீவு பயணங்களுக்கு ஒரு தட்டு சோலே பத்தூர் தருவதாக அறிவித்துள்ளது. மாலத்தீவு சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் வகையில் #BoycottMaldives, லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கும் , மாலத்தீவு பயணத்தை ரத்து செய்பவர்வர்களுக்கும் ஒரு தட்டு சோலே பத்தூர் இலவசமாக தரப்படுகிறது.