நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் கூடலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூடலூர் எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் தனது காரில் கட்சியினருடன் மசினகுடியை கடந்து நேற்று மாலை 3.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மசினகுடி – மாவனல்லா இடையே வனத்திலிருந்து கரடி ஒன்று வேகமாக நடந்து வந்தது. பின்னர் எம்.எல்.ஏ.வின் காரை மறித்தவாறு நடுரோட்டில் நின்றது.
இதனால் தொடர்ந்து செல்ல முடியாமல் எம்.எல்.ஏ நடுவழியில் நின்றார். மேலும் காரின் கண்ணாடிகளை ஏற்றியவாறு கட்சியினர் உள்ளே அமர்ந்திருந்தனர். அப்போது கரடி சாலையில் எதையோ தேடுவது போல் அங்கும் இங்கும் சுற்றி வந்தது. சுமார் 5 நிமிடத்திற்கு பிறகு சாலையோரம் உள்ள வனத்துக்குள் சென்றது.
NEWS EDITOR : RP