கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34). இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம் ஆகும். நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால் விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும் அவர் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார்.
இந்த சந்தேகம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்து வந்துள்ளது. இதனால் மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவில் விஜய், மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சித்தேப்பள்ளி கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார்.
அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திய விஜய், மாரேசிடம் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாரேசின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்த கொடூரத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார். பின்னர் மாரேஷ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்துள்ளனர். இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் திடீரென்று வைரலானது. இது காண்போரின் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. கடந்த 19-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி போலீசார் மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தில் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த துணி வியாபாரி நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
NEWS EDITOR : RP