இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 13 ஆண்டுகளாக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்த அவர் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இந்திய அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தபோது சதம் விளாசி அணியைக் காப்பாற்றினார்.
106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி அணில் கும்ளேயின் சாதனயையும் சமன் செய்தார். இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார் அஸ்வின். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.