கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.
அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது. அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலாளியான மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 65) என்பவரை தூக்கி வீசியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது. அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது. இதனையடுத்து கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீசார் மற்றும் வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், மக்களை அச்சுறுத்திவரும் அரிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதுமலையை சேர்ந்த பழங்குடியினர்களான பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இதற்காக தேனி விரைகின்றனர்.