தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். அந்த வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டார்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளதாகவும், அவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய்யே நேரில் சந்தித்து பரிசுகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வரும் ஜூன் 17 ஆம் தேதி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவார் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் சொல்லுக்கிணங்க, வரும் சனிக்கிழமை (17.06.2023), ’அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த “பத்து மற்றும் பன்னிரெண்டாம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்”.
இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP