முஸ்லிம்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றாக உள்ள பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையிலும், பலிக்கு ஈடாக இறைவன் ஒரு ஆட்டை பலியிட கொடுத்ததையும் நினைவு கூர்ந்து தொழுகை நிறைவேற்றுகிறார்கள்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் அதிகாலையில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்.
சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
NEWS EDITOR : RP