தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 107 டிகிரி, வேலூரில் 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 104 டிகிரி, பாளையங்கோட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, மதுரை விமான நிலையத்தில் தலா 103 டிகிரி, கடலூர், பரங்கிப்பேட்டை, கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி, தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், ஈரோடில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கடந்த மே 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. இதபால் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட்டு வெப்பத்தில் இருந்து காத்து கொண்டனர்
சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி, வைகாசி 14-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.