கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால், ஜெட்டா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வந்தது.இதனால் ஹஜ் பயணம் செல்வோர், உம்ரா பயணம் செல்வோர், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்வோர் என அனைவரும் இலங்கை வழியாக செல்ல வேண்டியிருந்தது. இலங்கை வழியாக அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் தேவைப்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் நேற்று புதன்கிழமையிலிருந்து சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஜெட்டா – சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. நேரடியாக விமான சேவை தொடங்கியதால் அதில் 215க்கும் மேற்பட்ட புனித உம்ரா பயணிகள் சென்றனர். அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்கு பின்
இயக்கப்படுகிறது. இதனால் ஜித்தாவிற்கு செல்லும் பயணநேரம் ஐந்தரை மணி நேரமாக குறைகிறது. இதனால் 200 ரியால் முதல் 610 ரியால் வரை பணம் மிச்சம் ஆகும். நேரடி விமான சேவையை சென்னையில் இருந்து தொடங்க வேண்டும் என இந்திய ஹஜ் அசோஷியேஷன் சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. நேரடி விமான சேவையை தொடங்க உதவிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.