பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதி புருஷ். இப்படத்தின் டீஸர் வெளியான பிறகு பல டிரோல்களை சந்தித்தது ஐதராபாத் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ் வேலையைப் பார்த்து கொதித்து போனார்கள்.
ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர். ஆனால் தற்போது டீசரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புதிய டிரெய்லர் நேற்று (ஜூன் 6) வெளியானது. இதன் கிராபிக்ஸ் தரம் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவான படத்தின் கிராபிக்ஸ் சாதாரண வீடியோ கேமில் வரும் கிராபிக்ஸ் போன்ற இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் டிரோல் செய்து வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க ராமாயணத்தை இப்படி மட்டமான கிராபிக்சில் படமாக்கிய இயக்குநர் ஓம் ராவத்தை மன்னிக்கப் போவதில்லை என்று நெட்டிசன் ஒருவர் கோபமாக பதிவிட்டுள்ளார். இன்னொருபக்கம், ராமராக நடிக்க எந்தவித மெனக்கெடலிலும் பிரபாஸ் ஈடுபடவில்லை. ராமர் கதாபாத்திரத்துக்கு அவர் சுத்தமாக பொருந்தவில்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP