விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பெறும் மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
‘என்னுடைய வாக்காளர்கள் பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள்’ நாம் தமிழர் கட்சியை தொடங்கியபோது, சீமான் உதிர்த்த முத்துக்களில் இதுவும் ஒன்று. அது ஒருவகையில் உண்மையும் கூட. சீமானின் சூடு பறக்கும் செந்தமிழ் உரையை கேட்டதுமே வசியம் கொள்பவர்கள் அனைவரும் பதின்ம வயதை ஒட்டியவர்களே. ’அவர் அரசியலுக்கு கட்டாயம் வரவேண்டும்’ என்று சீமானால் அடிக்கடி வரவேற்புக்கு ஆளாகும் நடிகர் விஜய்யும் அந்த வகையில், பள்ளிக்கூட மாணவர்களையே குறிவைத்திருக்கிறார்.
சினிமாவில் மாஸ் ஹீரோவாக தங்களை முன்னிறுத்த விரும்புவோர், இளைஞர்களுக்கு அப்பால் தாய்மார்களின் ஆதரவை பெற விரும்புவார்கள். அடுத்தபடியாக அவர்கள் குறி வைப்பது குழந்தைகளை. எம்ஜியார் முதல் சிவகாத்திகேயன் வரை அதற்கான சான்றுகளை அவர்களது திரைப்படங்களில் அடையாளம் காணலாம். விஜய்யும் அதற்கு விதிவிலக்கல்ல.
அடுத்து அல்லது அதற்கடுத்து என, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்திருக்கும் விஜய் மக்கள் மன்றத்தினர், திரையில் நிழலாடுவதற்கு அப்பால் நிஜத்திலும் மாணவர்களின் ஆதரவை பெற களமிறங்கி உள்ளனர். அந்த வகையில், அண்மையில் வெளியான பிளஸ் 2 மற்றும் அடுத்து வெளியாகவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறுவோரை அழைத்து, விஜய் கையால் பரிசளித்து, பிரியாணி புகட்டி கௌரவிக்க காத்திருக்கிறார்கள்.
அதனடிப்படையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து கல்வி உதவி தொகை மற்றும் பரிசுகளை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின், அவர்களின் விபரங்களையும் திரட்டி, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ – மாணவியருக்கு, தன் கையால் உதவித் தொகைகளை, விஜய் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.