நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத்திறமைகளைக் கொண்டவர் தான் மனோபாலா. இவர் ஆரம்ப காலத்தில் இயக்குநராக இருந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். மனோபாலா 20 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், 1985-ல் மோகன், ராதிகா, ஜெய்சங்கர், நளினி நடிப்பில் வெளிவந்த பிள்ளை நிலா ,1987-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சிறைப்பறவை திரைப்படம், 1989-ல் விஜயகாந்த் , சுஹாசினி, ரேகா நடிப்பில் வெளியான என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், 1990 ஆம் ஆண்டு சத்யராஜ், சீதா, ஷோபனா நடிபில் மல்லுவேட்டி மைனர் , 1993-ஆம் ஆண்டு பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா நடித்து வெளிவந்த முற்றுகை போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இப்படங்கள் அனைத்தும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மனோபாலா இயக்குநராக மட்டுமின்றி, 700 க்கும் மேற்பட்ட படங்களிலும், 19 தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் நிறைந்திருந்தார்.
கமல்ஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குநர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமல்ஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
69 வயதான நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி மாதம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.