சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.
கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புறநகர் ரயிலில் ஏ.சி பெட்டிகளை இணைக்க உள்ளதாக கடந்த வருடம் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த பணிகள் நடப்பு ஆண்டில் இம்மாதம் (ஏப்ரல்) முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் எனவும்
அதன்படி, குளிர்சாதன வசதி கொண்ட சென்னை புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான சேவை தொடங்கியுள்ளது. சுமார் 12 பெட்டிகளைக் கொண்ட இந்த குளிர்சாதன மின்சார ரயிலில் குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.35 மற்றும் அதிகபட்சமாக ரூ.105 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் குளிர்சாதன ரயில் காலை 8:35க்கு செங்கல்பட்டு சென்றடையும். அதே ரயில் காலை 9 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு 10:35க்கு சென்னை கடற்கரையை வந்தடையும். மாலை 3:45க்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5:25க்கு செங்கல்பட்டு சென்றடையும்.
அதே ரயில் மாலை 5:45 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு இரவு 7:15க்கு சென்னை கடற்கரையை வந்தடையும். சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7:35க்கு புறப்படும் ரயில் தாம்பரத்திற்கு இரவு 8:30க்கு சென்றடையும். அதேபோன்று அதிகாலையில் தாம்பரத்திலிருந்து 5:45 புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை 6:45க்கு வந்தடையும்.