தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5 வகையான இனிப்புகள் அடங்கிய 500 கிராம் தொகுப்பு ரூ.450-க்கு ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலை மற்றும் சிறந்த தரத்தோடு வழங்கிவரும் ஆவின் நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தரமாக தயார் செய்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தீபாவளி 2023 பண்டிகைக்கும் கீழ்க்கண்ட தரமான சிறப்பு இனிப்பு வகைகள் எவ்வித விலை மாற்றமும் இன்றி பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
- காஜூ கட்லீ (250 கி) -ரூ.260,
- நட்ஸ் அல்வா (250 கி) -ரூ.190,
- மோத்தி பாக் (250 கி) -ரூ.180,
- காஜு பிஸ்தா ரோல்(250 கி) -ரூ.320,
- நெய் பாதுஷா (250 கி) -ரூ.190
மேற்கண்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (Combo Box) 500 கிராம் -ரூ.450 விலையில் ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். ஆவின் இனிப்பு வகைகள் அனைத்தும் அக்மார்க் தரம் பெற்ற ஆவின் நெய்யினால், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இனிப்புகளாகும். மேற்படி இனிப்பு வகைகள் அனைத்தும் வருகின்ற 10.10.2023 முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக கிடைக்கப்பெறும். பொதுமக்களுக்கு தேவைப்படும் இனிப்பு வகைகள் ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பெற்று பயன்பெறலாம்.
NEWS EDITOR : RP