கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மகன் சதாம்உசேன் (வயது 33). பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஊத்தங்கரையில் திருப்பத்தூர் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பக்கமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் சதாம் உசேன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அந்த பகுதியில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் உடைந்து பஸ் மீது விழுந்தது. பஸ் மோதியதில் சதாம்உசேன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் இறந்த சதாம் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பஸ்சை ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இரவு மர்ம நபர்கள் சிலர் ஊத்தங்கரை போலீஸ் நிலைய வளாகத்திற்குள் வந்தனர். அவர்கள் பள்ளி பஸ்சின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் எரிந்து எலும்புகூடானது. போலீசார் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். போலீஸ் நிலைய வளாகத்திற்குள் வந்து பள்ளி பஸ்சை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
NEWS EDITOR : RP