தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுவன் விளையாட சென்றான். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பது நேற்று தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உறவினரான 18 வயதான பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை தந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தொட்டியில் வீசி சென்று உள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனிடையே, சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
NEWS EDITOR : RP