அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் பெல்டோலா பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பி கொண்டிருந்த மாணவன் (வயது 15) கடத்தப்பட்டான். கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோரிடம் 24 மணி நேரத்திற்குள் ரூ.60 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் என போனில் மிரட்டினர். அவர்களும் முதல் கட்டமாக ரூ.90 ஆயிரத்தை கடத்தல்காரர்கள் அனுப்பிய நபரிடம் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதன்பின் கடத்தல்காரர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு கவுகாத்தி நகரின் புறநகர் பகுதியில் உள்ள போண்டா பகுதியில் ஒரு சிறுவனின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அது கடந்த 8-ம் தேதி கடத்தப்பட்ட பள்ளி மாணவனின் சடலமா? என அடையாளம் காட்ட அவனது தந்தையை உடன் அழைத்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது சடலமாக கிடப்பது தன்னுடைய மகன் தான் என்று தந்தை கதறி அழுதுள்ளார்.
இதன்பின்னர் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் குற்றவாளியை அவனது வீட்டில் வைத்தே கைது செய்தனர். பள்ளி மாணவனின் தந்தை, கைது செய்யப்பட்டவர் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஹடிகான் பகுதியில் தெரு ஓரத்தில் கடை நடத்தி வருவதாகவும், அவரை எங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் என் மகன் காணாமல் போன பிறகு கடத்தல்காரர்களின் செய்தியை சொல்ல அவரை தான் என் வீட்டிற்கு அனுப்பினர் என்றும் கூறினார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவருக்கும் மாணவனுக்கும் ஆன்லைன் விளையாட்டு மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து பணம் கட்டி விளையாடுவார்கள் என்றும், அதில் மாணவன் அவரிடம் கடன் வாங்கி உள்ளதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அசாம் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாணவனை கொலை செய்ய கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி உள்ளனர். பின் உடலை கவுகாத்தி நகருக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர். இறந்த உடலில் பல ஆழமான வெட்டுக்கள் உள்ளன. உடல் பிரேத பரிசோதனைக்காக கவுகாத்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
NEWS EDITOR : RP