உலகம் முழுவதும் மே 28-ந்தேதி ‘உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உலகளாவிய நாடுகளில் வறுமை உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காலம் பட்டினியில் வாடும் மக்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, நடிகர் விஜய்யின் உத்தரவின்பேரில் வரும் 28-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பசி என்னும் பிணியை போக்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தளபதி விஜய் ஒருநாள் மதிய உணவு சேவை’ என்ற இந்த திட்டத்தின் மூலம் 234 தொகுதிகளிலும், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக மே 28-ந்தேதி இலவச மதிய உணவு வழங்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் மே 28-ந்தேதி இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.