இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
மேலும், அண்டை நாடான மொசாம்பிக்கையும் ‘சிடோ’ புயல் தாக்கியது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்ததுள்ளது.
மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.