இம்ரான்கான் கைது விவகாரம், அவரது கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முதல் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் என நாடெங்கும் இம்ரான்கான் கட்சியினர் வன்முறை போராட்டங்களில் இறங்கினர். அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. போலீஸ் நிலையங்களும் தாக்கப்பட்டன.
இதற்கிடையே இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதற்கு எதிராக இம்ரான்கான் சார்பில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி உமர் அத்தா பந்தியல், நீதிபதி முகமது அலி மஜார், அத்தர் மினல்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்ரான்கான் வக்கீல், “கைது செய்வதில் இருந்து காத்துக்கொள்வதற்கு முன்ஜாமீன் பெற இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு சென்றார். ஆனால் அவர் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு விட்டார்” என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், கோர்ட்டு வளாத்தில் வைத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்”இம்ரான்கான் கைது சட்டவிரோதம்” என கூறிய நீதிபதிகள், அவரை ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இம்ரான்கான் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து இம்ரான்கான் இன்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும், ஐகோர்ட்டு உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இம்ரான்கான் போலீஸ் லைன் விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுவார், அவர் கைதியாக கருதப்பட மாட்டார், அவரது பாதுகாப்பை இஸ்லாமாபாத் போலீஸ் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது . பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு 2 வாரம் ஜாமீன் வழங்கியது