மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது.
இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, பல திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கபட வேண்டும் எனவும், மலையாளம் மட்டுமின்றி மற்ற திரையுலகில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் வெளிவருகின்றன. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டின் பேரில் பதியப்பட்ட வழக்கு, தொடர்ந்து விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.இதனையடுத்து தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்திருந்தர். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நான் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தியைக் கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அறிந்து கொள்ளவும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன். இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மற்றபடி இந்த விவகாரம் சட்டப்படி கையாளப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த பெண் குற்றம் சாட்டிய அந்த குறிப்பிட்ட நாளில் அவர் கொச்சியில் தங்கி இருந்ததற்கான விடுதி ரசீது வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார்.