தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.பல இடங்களில் கோடை மழை கொஞ்சம் வெக்கையை தணித்தது. தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் சூரைகாற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 9 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவானது.