மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ. 11,368 கோடி, கோவையில் உக்கடம் முதல் கோவை விமான நிலையம் வரை 20.4 கிலோமீட்டர் தொலைவிற்கும், கோயம்புத்தூர் ஜங்ஷன் முதல் வலியம்பாளையம் பிரிவு 14.4 கி.மீ வரை என இரண்டு வழித்தடங்களில் சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.10,740 கோடி முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய சென்னை வருகை தந்துள்ள பன்னாட்டு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, நாளை (ஜூலை – 3ம் தேதி) மதுரை மெட்ரோ ரயில் அமையும் இடங்களையும், நாளை மறுநாள் (ஜூலை – 4ம் தேதி) கோவையில் அமைய உள்ள மெட்ரோ வழித்தடத்தையும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
வங்கி பிரதிநிதிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு வரும் ஜூலை 4ம் தேதி தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்தும் ஆலோசனையும் மேற்கொள்கின்றனர். மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை (DFR) மற்றும் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மெட்ரோ ரயில் நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து, விரைவில் தமிழ்நாடு அரசு மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும், அதன் பிறகு மத்திய அரசும் இத்திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்ட கட்டுமான பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.